"தாய்மொழி தின வாழ்த்துக்கள்"
இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.
தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
கம்ப இராமாயணம்,
"என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் "
"எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்"
என்று புகழ்கின்றது.
தமிழ் விடுதூது,
"இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்"
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.
தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"
பாரதிதாசன்,
"தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்"
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன்" என்று பொறிக்கச் செய்தார்.
திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
இத்தகு வளமிக்க தமிழ் மொழி நமது தாய் மொழி என்பதில் பெருமிதம் கொள்வோம். வளரும் தலைமுறைக்கு தாய் மொழியின் சிறப்பை அறியச்செய்வோம்.
செ. அகிலன், எட்டாம் வகுப்பு மற்றும் கார்த்திகா, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களது பாராட்டுகள்...